மேல்பூரிக்கல் கிராமத்தில் ஒகேனக்கல் தண்ணீர் வராததால் கிராம மக்கள் அரசு பேருந்தை சிறை பிடித்து சாலை மறியல்.

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் மானியத அள்ளி ஊராட்சிக்கு உட்பட்டது மேல்பூரிக்கல் கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்து பொதுமக்கள் குடிநீர் தேவைக்காக பஞ்சாயத்து கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகளை பயன்படுத்தி வந்தனர்.
தற்பொழுது பருவமழை சரிவர பொழியாத காரணத்தினால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் வழக்கமாக ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் வழங்கக்கூடிய தண்ணீரை முறையாக கிராமத்திற்கு வராமல் இருந்துள்ளது. இதன் காரணமாக கிராம மக்கள் தண்ணீர் இன்றி மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளனர்.

இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் கூரியும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக இருந்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இன்று காலை பரிகத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு தர்மபுரியை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்தை 30க்கு மேற்பட்ட பொதுமக்கள் சிறை பிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் லோகநாதன் மற்றும் தொப்பூர் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சு வார்த்தையில் கிராமத்திற்கு தேவையான ஒகேனக்கல் தண்ணீரை முறையாக ஏற்ற அறிவுறுத்துவதாக அலுவலர் தெரிவித்ததின் அடிப்படையில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இந்த சாலை மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
