தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வாரச்சந்தையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை வாரச்சந்தை செயல்படுவது வழக்கம். இந்த வாரச்சந்தையில் விடியற்காலை 3 மணியிலிருந்து காலை 6 மணி வரை ஆடு, மாடு, கோழி விற்பனை நடைபெறும். அதற்கு மேலிருந்து இரவு 9 மணி வரை காய்கறிகள் விற்பனை நடைபெறும். ஆடு, மாடுகளை வாங்குவதற்காக வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் வருகின்றனர்.இதன் காரணமாக நல்லம்பள்ளி வாரச்சந்தை பிரபலமான வார சந்தையாக இருந்து வருகிறது.இந்த சந்தைக்கு நல்லம்பள்ளி சுற்றுவட்டார பகுதி தண்டுகாரம்பட்டி, அதியமான் கோட்டை, ஏலகிரி, இலளிகம், நார்த்தம்பட்டி, சிவாடி போன்ற பல கிராமங்களில் இருந்து பொதுமக்கள் வார சந்தைக்கு வருகின்றனர். இதன் காரணமாக காய்கறி வியாபாரிகள் விற்பனைக்கு தேவையான கேரட், பீன்ஸ், கத்தரிக்காய், உருளைக்கிழங்கு, தக்காளி போன்ற காய்கறிகளை விவசாயிகளிடம் விற்பனைக்காக கொண்டு வருவதை வாங்கியும், வெளி ஊர்களில் இருந்தும் வாங்கி வந்து விற்பனை செய்கின்றனர். அப்படி நேற்று விற்பனைக்காக பீன்ஸ் மற்றும் கேரட் 5 டன்னும், உருளைக்கிழங்கு 8 டன்னும், கத்திரிக்காய் 5 டன்னும் என மொத்தம் 18 டன்னிற்கு மேல் விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

