தங்களுக்கு மாடி வீடு வேண்டாம் – இருக்கின்ற இடத்தில் வீடு கட்டி கொடுத்தால் போதும் என கதறி அழுத பெண் – இலங்கை தமிழரை பார்வையிட்ட TVK மாவட்ட செயலாளரிடம் பெண்கள் குமுறல்.

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வாணியாறு அணை அருகே இலங்கைத் தமிழர் மறுவாழ்வு மையத்தில் ஏராளமான இலங்கை தமிழர்கள் வசித்து வருகின்றனர். கடந்த 36 வருடங்களாக வசித்து வரும் இவர்களுக்கு, முறையாக வாழ்வதற்கான வாழ்விடம் இல்லை என தெரிவித்து வருகின்றனர். மேலும் அடுக்குமாடி குடியிருப்பில் இவர்களுக்கு வீடுகள் வழங்குவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்தும், அந்த அடுக்குமாடி குடியிருப்புகளுக்குள் வசித்து வந்தால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் எனவும், தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தற்போது வசிக்கும் பகுதியிலேயே குடியிருப்புகளை அரசு கட்டித் தர வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையை அறிந்த தமிழக வெற்றி கழக தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளர் தாபா சிவன் இலங்கைத் தமிழர்களிடம் நேரில் சென்று தங்களின் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது மாவட்டச் செயலாளரிடம் தெரிவித்த இலங்கை தமிழர்கள், தங்களின் குழந்தைகள் முள்ளிக்காடு பகுதியில் உள்ள பள்ளியிலேயே படிப்பதற்கு சுலபமாக இருப்பதாகவும், தற்போது வாழ்ந்து வரும் வீடுகளுக்குள் மழை பெய்யும் பொழுது ஆங்காங்கே மழைநீர் ஒழுகுவதாகவும், தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொண்டு தங்களுக்கு இதே பகுதியில் வீடுகளை கட்டித் தரவேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

அப்போது சுமார் 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மாவட்ட செயலாளரிடம் தங்களுக்கு மாடி வீடு வேண்டாம், இதே பகுதியில் இலவசமாக வீடுகளை கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கதறி அழுத காட்சி காண்போரின் கண்களுக்கு பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளன.

மனுவைப் பெற்ற தாபா. சிவன், கோரிக்கையை முதலமைச்சர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும், விரைவில் அமைச்சர் நேரில் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பார் என தெரிவித்தார்.


இந்த நிகழ்வில் கிழக்கு மாவட்ட செயலாளர் விஜயகாந்த், மாவட்ட நிர்வாகி RJB நடராஜன், மாவட்ட சார்பு அணி மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

By Raja

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *