தர்மபுரி பாரதிபுரத்தில் கோயில் அருகில் இருந்த 20 ஆண்டு பழமையான அரசமரத்தை மர்ம நபர்களால் அதிகாலையில் வெட்டி சாய்க்கப்பட்டது. மரம் சாலையில் விழும் போது, நூலிழையில் கார் தப்பிய சிசிடிவி காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தர்மபுரி – சேலம் மெயின்ரோடு, பாரதிபுரத்தில் பழமை வாய்ந்த காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது. இந்த கோயில் முன் அரசமரம் இருந்தது. நேற்று அதிகாலை 2.30 மணிக்கு, கோயில் முன்பிருந்த அரசமரத்தை மர்ம நபர்கள் வெட்டி சாய்த்தனர். இதனால், அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்த தகவலின் பேரில், தர்மபுரி தீய ணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடம் விரைந்து சென்று, சாலையில் கிடந்த மரத்தை வெட்டி அகற்றினர். இதையடுத்து, போக்குவரத்து சீரானது. தகவலறிந்து கோயில் முன் திரண்ட பொது மக்கள், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
தர்மபுரி டவுன் போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். தொடர்ந்து மரத்தை வெட்டி சாய்த்தவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்குமாறு, பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். அதன் பேரில், டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று அதிகாலை மர்ம நபர்கள், அரச மரத்தை வெட்டி சாய்க்கும் சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது. வெட்டி சாய்க்கப்பட்ட மரம் சாலையில் விழும் போது, அந்த வழியாக வந்த கார் ஒன்று நூலிழையில் தப்பிச்செல்லும் நெஞ்சை பதைபதைக்க வைக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, தர்மபுரி நெடுஞ்சாலைத் துறை உதவி பொறியாளர் மதன்குமார்(கட்டு மானம் -பராமரிப்பு) நேற்று டவுன் போலீசில் புகார் மனு அளித்தார்.

அதில், கோயில் அருகே இருந்த அரச மரத்தை வெட்டி சாய்த்து பொது மக்களுக்கும், போக்குவ ரத்துக்கும் இடையூறாக சாலையின் குறுக்கே வீசி சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில், 4 பிரி வின் கீழ் வழக்குப்பதிந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
