தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்திற்கு ஏ.ஜெட்டிஹள்ளி ஊராட்சிக்கு உட்பட்டது தகடூர் கிராமம்.இந்த கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு காமராஜர் நகர் பகுதியில் உள்ள குடிநீர் கிணற்றிலிருந்து குழாய் மூலம் தகடூர் ஓம் சக்தி கோயில் வளாகத்தில் உள்ள மேல்நிலை நீர் தேக்க குடிநீர் தொட்டிக்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்த கிணறு திறந்த வெளியில் இருப்பதால் அருகில் வசித்து வருபவர்கள் தங்கள் வீடுகளில் உள்ள குப்பைகளை கிணற்றில் கொட்டி வருகின்றனர். மேலும் கடந்த சில மாதங்களும் முன் குடிநீர் கிணற்றில் தவறி விழுந்து ஒருவர் இறந்தார். அப்போதிருந்து இந்த திறந்தவெளி கிணறை பாதுகாப்பானதாக மாற்ற கம்பி வேலி அமைக்க வேண்டும் என தகடூர் பொதுமக்கள் ஏ.ஜெட்டிஹள்ளி ஊராட்சி நிர்வாகத்திற்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் இந்த குடிநீர் கிணற்றில் பாதுகாப்பு கம்பி அமைக்க இதுவரை ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை.இதனால் இப்பகுதி பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் குடிநீர் கிணற்றில் இருந்து தகடூர் ஓம் சக்தி அம்மன் கோயில் வளாகத்தில் உள்ள மேல்நிலை நீர் தேக்க குடிநீர் தொட்டிக்கு தண்ணீர் வரும் குழாய் சேதமானது. இதை சீரமைக்க வேண்டும் என தகடூர் பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்துக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் ஊராட்சி நிர்வாகம் இதுவரை சேதமான குடிநீர் குழாயை சீரமைக்க இருந்துள்ளார்.
இதனால் கடந்த சில தினங்களாக குடிநீர் கிடைக்காமல் அவதியடைந்த தகடூர் பகுதி மக்கள் நேற்று ஓம் சக்தி கோயில் முன் உள்ள மேல்நிலை நீர் தேக்க குடிநீர் தொட்டி முன் காலி குடங்களுடன் சேதமான குடிநீர் குழாயை உடனடியாக சீரமைக்க வேண்டும். கிணற்றில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க பாதுகாப்பு கம்பி வேலி அமைக்க வேண்டும் என வலியுறுத்தினார். பொதுமக்கள் காலி குடங்களுடன் போராடிய போதும் ஊராட்சி நிர்வாகம் சார்பாக யாரும் வந்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் தெரிவிக்க உள்ளதாக கலைந்து சென்றனர். மேலும் தகடூர் பொதுமக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்க மாவட்ட ஆட்சியர் சதீஸ் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
