தர்மபுரி மாவட்டம் பாளையம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றிய குணசேகரன் என்பவரும், தண்டுகாரம்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர் வேலுச்சாமி ஆகிய இருவரும், கடந்த ஏப்ரல் 30 அன்று பணி ஓய்வு பெற்றனர். இதனை தொடர்ந்து பணி ஓய்வு பெற்ற இரு ஆசிரியர்களுக்கும், அவர்களின் சொந்த ஊரான ஏலகிரி கிராமத்தில், முன்னாள் மாணவர்கள் சார்பில், பணி நிறைவு பாராட்டு விழா நடத்தினர்.
இந்த விழாவிற்கு முன்னாள் மாணவர் ரமேஷ் தலைமை தாங்கினார். முன்னாள் மாணவர்கள் இன்பரசன், ஆறுமுகம், சுரேஷ், அன்பு, அருள்காந்தி, சரவணன், செல்வமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் பங்கேற்ற அனைவரையும் முன்னாள் மாணவர் பெரியசாமி வரவேற்றார். விழாவில் பணி ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் குணசேகரன் மற்றும் வேலுச்சாமி ஆகியோருக்கு, முன்னாள் மாணவர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஒன்றிணைந்து, பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.
பின்னர் பணி நிறைவு பெற்ற ஆசிரியர்கள், பணி காலத்தின் போது தங்களிடம் பயின்ற மாணவர்கள் பற்றிய அனுபவங்களையும், முன்னாள் மாணவர்கள் பணி ஓய்வு பெற்ற ஆசியர்களிடம், பணி காலத்தின் போது பயின்ற அனுபவங்களை பேசியது, பணி நிறைவு பாராட்டு விழாவில் நெகிழ்ச்சியடைய வைத்தது. இதில் முன்னாள் மாணவர்கள், மற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
