தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்டது பாகல் அள்ளி ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட தண்டுகாரம்பட்டி கிராமத்தில் 500க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் இருக்கும் பொதுமக்கள் ஊராட்சியின் மூலம் வழங்கக்கூடிய குடிநீரை பயன்படுத்தி வருகின்றனர். தண்டுகாரம்பட்டி மையப் பகுதியில் 15க்கு மேற்பட்ட குழாய்கள் ஒன்றாக அமைக்கப்பட்ட நிலையில் அதே இடத்தில் அனைவரும் வந்து தங்களுக்கு தேவையான குடிநீரை பிடித்து சென்று வந்தனர். அதன் பிறகு ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் வீடு தோறும் தனிநபர் குடிநீர் குழாய் அமைப்பதற்கு ஒரு வீட்டிற்கு 1000 ரூபாய் கட்டணம் வசூல் செய்து சுமார் 100 பைப்பிற்கு மேல் அமைக்கப்பட்டது. அவ்வாறு அமைக்கப்பட்ட பைப்புகளில் 50க்கு மேற்பட்ட வீடுகளுக்கு தண்ணீர் செல்வதே கிடையாது. ஒரு சில இடங்களில் வீட்டிற்கு தண்ணீர் வராத நிலையில் பைப்பு அடிக்கச் சென்று தண்ணீர் பிடிக்கும் சூழலை ஏற்பட்டுள்ளது. அதுவும் அங்கு பாத்திரங்கள் வைத்து மொண்டு ஊத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் வரும் பொழுது பல நூறு லிட்டர் குடிநீர் வீணாக தெருக்களில் ஓடுகிறது. இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்திடம் முறையாக ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் அமைக்கப்படவில்லை. இதனால் தண்ணீர் தினமும் வீணாக செல்வதை சீரமைத்து கொடுக்க வேண்டும் என பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். தண்ணீர் வீடுகளுக்கு வராத நிலையில் தண்ணீர் கட்டணத்தை மட்டும் நாங்கள் ஏன் கட்ட வேண்டும் என கொந்தளிப்பில் உள்ளனர்.
இது பற்றி அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது; எங்கள் கிராமத்தில் பல வருடங்களாக நடுவீதியில் அமைக்கப்பட்ட குரூப் டேப் மூலம் தண்ணீர் பிடித்து வந்தோம். நான்கு வருடத்திற்கு முன்பு ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் வீடு தோறும் குடிநீர் குழாய் அமைத்துக் கொடுப்பதாக கூறி 1000 ரூபாய் வசூல் செய்தனர். இந்த நிலையில் 50 வீடுகளுக்கு மேல் தண்ணீர் செல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். இதனால் ஊராட்சி நிர்வாகத்திடம் குடிநீர் குழாய் சீரமைத்துக் கொடுக்க வேண்டும் என புகார் தெரிவித்தால் அதற்கு அவர்கள் போதிய நிதி இல்லை அதனால் செய்ய முடியாது என இலட்சியமாக கூறுகின்றனர். இந்த நிலையில் வீட்டிற்கு வராத குடிநீர்காக எப்படி நாங்கள் 600 ரூபாய் கட்ட முடியும். எங்களிடம் குடிநீர் இணைப்பு வழங்குவதற்காக 1000 ரூபாய் வசூல் செய்ததை வைத்து மீண்டும் பைப் லைனை சீரமைத்து முறையாக வீடுகளுக்கு தண்ணீர் வருவதை உறுதி செய்தால் குடிநீர் கட்டணத்தை கட்டுகிறோம் என கூறுகின்றனர்.
எனவே வீடுகள் தோறும் குடிநீர் இணைப்பு வழங்குவதற்காக 1000 ரூபாய் வசூல் செய்து, முறையாக குடிநீர் இணைப்பு வழங்காமல் இருப்பதை மறு சீரமைத்து பொதுமக்களின் தண்ணீர் பற்றாக்குறை போக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
