தருமபுரி மாவட்டம் இண்டூர் அருகே, கும்பளபாடியில் விவசாய நிலங்களுக்கு அருகே கல்குவாரி அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் புகார் மனு வழங்கியும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்காததால் வருகின்ற சட்டமன்றத் தேர்தலை புறக்கணிப்பதாக கூறி, இண்டூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்குவாரி உரிமையாளர் பொதுமக்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.
தருமபுரி மாவட்டம் இண்டூர் அடுத்த நாகர்கூடல் ஊராட்சிக்கு உட்பட்ட கும்பளப்பாடி மற்றம் கரடிகால் குண்டு கிராமத்தில் விவசாய பட்டா நிலத்தை ஒட்டியுள்ள நிலத்தில் அதிமுக பிரமுகர் ரத்னவேல் என்பவர் புதியதாக கல்குவாரி அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இதையறிந்த கும்பளப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி கிராம மக்கள் எங்கள் பகுதிக்கு கல்குவாரி வேண்டாம் என பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்தும் போராட்டம் நடத்திய எந்த ஒரு பயனும் இல்லாததால் தேர்தலை புறக்கணிக்க போவதாக தெரிவித்து கிராமப் பகுதியில் பிளக்ஸ் பேனர் அடித்து வைத்திருந்தனர். இதனால் காவல்துறையினர் கிராம மக்களையும் கல்குவாரி உரிமையாளரையும் பேச்சுவார்த்தைக்கு இண்டூர் காவல் நிலையத்திற்கு இன்று அழைத்திருந்தனர்.

இதனால் நேற்று 100-க்கும் மேற்பட்டோர் கிராம மக்கள் காலையில் காவல் நிலையத்தில் காத்திருந்தனர்.ஆனால் கல் குவாரி உரிமையாளர் நீண்ட நேரம் ஆகியும் வராததால் கிராம மக்கள் இண்டூர் காவல் நிலையம் முன்பு வருகின்ற சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக கூறி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, கல்குவாரி உரிமையாளர் ரத்தினவேலு மற்றும் அவரது நண்பர்கள் சிலர் காவல் நிலையத்திற்கு வந்திருந்தனர். அப்போது கல்குவாரிக்கு கனிம வள துறையின் சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆகையால் கல் குவாரி அமைக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
இதனால் இரு தரப்புக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இண்டூர் காவல்துறையினர் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து, கிராம மக்கள் கூறுகையில்,
தங்களது கிராமத்தில் பிரதான தொழில் விவசாயம். அதிமுக பிரமுகர் ரத்தினவேல் என்பவர் அவரது பட்டா மற்றும் அரசு புறம்போக்கு நிலத்தை ஒட்டியுள்ள இடத்தில் கல்குவாரி அமைக்க முயற்சித்து வருகிறார். இதனால், இங்குள்ள விவசாய நிலங்கள், நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பு மற்றும் வீடுகளுக்கு சேதம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.எனவே விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் நபர் மீது, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் வரும் சட்டசபை தேர்தலை நாங்கள் புறக்கணிப்போம் என்றனர்.

ஏற்கனவே கல்குவாரி அமைக்கும் பணியை கண்டித்து கடந்த மாதம் கிராம மக்கள் பொக்லைன் இயந்திரங்களை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டும், மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்தும் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதால் மீண்டும் கல்குவாரி அமைக்கும் பணி நடைபெறுவது பொதுமக்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அடுத்த கட்ட மாபெரும் போராட்டம் நடத்தப் போவதாகவும் பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
