தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்துள்ளது அனுமந்தபுரம் கிராமம். இந்த கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியானது செயல்பட்டு வருகிறது. நடந்து முடிந்த தேசிய திறனாய்வு தேர்வில் இப்பள்ளியில் படிக்கும் மாணவி அகிலா 153 மதிப்பெண் பெற்று மாவட்டத்தில் முதலிடத்தையும், மாநிலத்தில் நான்காம் இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.
அதேபோன்று இப்பள்ளியில் படித்து வரும் இளவரசி 116 மதிப்பெண், கவியரசி 98 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இவர்களுக்கு மாதம் ரூபாய் 1000 வீதம் நான்கு ஆண்டுகளுக்கு ரூபாய் 48,000 பெற தகுதி பெற்றுள்ளனர். இந்த மாணவிகளை பாராட்டும் விதமாக பள்ளி சார்பாக பாராட்ட விழாவானது நடைபெற்றது. இந்த விழாவை பள்ளி தலைமை ஆசிரியர் பாஸ்கர் தலைமையேற்று நடத்தி வைத்தார்.
இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக வந்த நல்லம்பள்ளி வட்டார கல்வி அலுவலர்கள் சரவணன்,சுமதி, பரமசிவம்,மற்றும் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் அல்லி முத்து ஆகியோர் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு பொருட்கள் வழங்கியும் வாழ்த்தி பாராட்டினர்.
இப்பள்ளியில் 2014 ஆண்டு முதல் 2025 கல்வி ஆண்டு வரை 25 மாணவர்கள் தேசிய திறனாய்வு தேர்வு வெற்றி பெற்று அரசின் உதவித்தொகை மாதம் தோறும் ரூபாய் ஆயிரம் பெற்று வருகின்றனர்.

இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் அங்கமுத்து,கவிதா, யுவராஜ், சுமதி, கணேசன், காலமாரி மற்றும் ரேகா ஆகியோர் செய்திருந்தனர். விழாவில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
