தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த பூகானஅள்ளி ஊராட்சிக்குட்பட்டது பூகானஅள்ளி கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற துணை தலைவரின் உறவினர் ஒருவர் விவசாய நிலத்தில் வெடிவைத்து கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார். வெடி வைத்து கிணறு தோண்டும் நிலத்தை ஒட்டி குடியிருப்பு வீடுகள் உள்ளது. கிணறு ஆழப்படுத்தும் போது எவ்வித அனுமதி இல்லாமல், கடந்த சில நாட்களுக்கு முன் சக்தி வாய்ந்த வெடி வைக்கப்பட்டதால், தற்போது கிணற்றை ஒட்டியுள்ள கான்கிரீட் குடியிருப்பு வீடுகளில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் விரிசல்கள் ஏற்பட்டு வீடுகள் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.

இதில் குறிப்பாக அதே ஊரைச் சேர்ந்த கூலி தொழிலாளி குமரேசு என்பவரது, கான்கிரீட் வீட்டில் ஆங்காங்கே அதிகளவு விரிசல்கள் ஏற்பட்டதால், வீடு இடிந்து விழும் நிலையில் உள்ளது. அரசு அதிகாரிகளிடம் எவ்வித அனுமதியும் பெறாமல் கிணறுக்கு வெடி வைத்த காரணத்தால், தற்போது கூலி தொழிலாளியின் வீடு உட்பட 3 வீடுகள் விரிசல் ஏற்பட்டுள்ளதால், அச்ச நிலைக்கு குடியிருப்பு வாசிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

குடியிருப்புக்கு மத்தியில் கிணறு தோண்டும் போது, சக்தி வாய்ந்த வெடி வைக்க அனுமதி வாங்காமல் விதிமுறையை மீறி வருவாய்த்துறை ஆசியோடு, கிணறு தோண்டும் கும்பல் வெடிவைத்துள்ள சம்பவம் பூகானஅள்ளி கிராமத்தில் அரங்கேரி உள்ளது.

இதுகுறித்து பாப்பாரப்பட்டி போலீசாருக்கும், பாலக்கோடு வருவாய்த்துறை அதிகாரிகளுக்கும், அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், கிணறுக்கு வெடி வைத்து, வீடுகளை சேதப்படுத்திய கும்பலுக்கு ஆதரவாக அதிகாரிகளும், போலீசாரும் செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

வீட்டின் சேதம் குறித்து கேட்ட பெண்ணை, கிணற்றுக்கு வெடி வைத்த 10-க்கும் மேற்பட்ட கும்பல் ஒன்று, தகாத வார்த்தைகளால் திட்டி, அடிக்க முயற்சி செய்யும் சிசிடிவி வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

வீட்டில் தனியாக இருக்கும் பெண்ணிடம், பூகானஅள்ளி முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தலைமையிலான கும்பல் ஒன்று, நாங்கள் அப்படித்தான் கிணற்றுக்கு வெடிவைப்போம் உங்களால் முடிந்ததை பார்த்துக் கொள்ளுங்கள் என, அப்பெண்ணிற்க்கு கொலை மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தர்மபுரி மாவட்ட நிர்வாகம் உரிய கவனம் செலுத்தி, குடியிருப்புக்கு மத்தியில் அனுமதி இல்லாமல் கிணற்றுக்கு சக்தி வாய்ந்த வெடிமருந்து வைத்து வெடித்ததில் சேதமடைந்துள்ள வீடுகளுக்கு உரிய இழப்பீடு வழங்குவதுடன், சேதம் குறித்து கேட்ட பெண்ணிண் வீட்டிற்க்கு அத்துமீறி அடிக்க சென்ற கும்பலையும் கைது செய்ய வேண்டும் எனவும், துணைபோன அதிகாரிகள் மீதும் தக்க நடவடிக்கை எடுக்ககோரி, பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

By Raja

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *