தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் ஏலகிரி ஊராட்சிக்கு உட்பட்டது ஓமல்நத்தம் கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் இறந்தவர்களை ஓமல்நத்தம் பகுதியில் உள்ள பெரிய ஏரி-நாகவதி அணைக்கு செல்லும் ஓடை அருகாமையில் அடக்கம் செய்வது வழக்கம். இந்த மயானத்திற்கு காலம் காலமாக தனியார் நிலத்தின் வழியாக சென்று வந்தனர்.
அந்த வழி தற்பொழுது செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ள நிலையில் மயானத்திற்கு பொது வழி இல்லாமல் திண்டாடி வந்தனர்.இந்த நிலையில் நேற்று அதே பகுதியை சார்ந்த செல்வம்(35) என்பவர் ஓசூருக்கு வேலைக்கு சென்றபோது விபத்தில் உயிரிழந்து விட்டார். அவருடைய சடலத்தை அடக்கம் செய்வதற்காக ஊருக்கு எடுத்து வந்தனர்.

அதன் பிறகு மயானத்திற்கு முறையாக சாலை வசதி இல்லாததால் சாலை வசதி வேண்டி சடலத்தை சாலையில் வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த தொப்பூர் போலீசார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பொதுமக்கள் எங்களுக்கு நிலையான மயானத்திற்கு நிலம் மற்றும் முறையான சாலை வசதி வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதன் அடிப்படையில் போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.
அதன் பிறகு சடலத்தை கரடு முரடான பெரிய ஏரி-நாகவதி அணை ஓடையில் இறங்கி எடுத்துச் சென்று அடக்கம் செய்தனர்.

