தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் 32 ஊராட்சிகளை உள்ளடக்கி செயல்பட்டு வருகிறது. இந்த ஒன்றியம் கம்மம்பட்டி,மிட்டாரொட்டி அள்ளி, தர்மபுரி கலைக் கல்லூரி,இண்டூர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கி நல்லம்பள்ளி ஒன்றியம் செயல்பட்டு வருகிறது. தருமபுரி மாவட்டத்தில் அதிகப்படியான நில பரப்புகளை கொண்டு நல்லம்பள்ளி ஒன்றியம் செயல்பட்டு வருகிறது. இந்த 32 ஊராட்சிகளிலும் 29 கிராம நிர்வாக அலுவலர்கள் நல்லம்பள்ளியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தை மையமாகக் கொண்டு பணியாற்றி வருகின்றனர். வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வட்டாட்சியராக பிரசன்னா மூர்த்தி என்பவர் பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் நல்லம்பள்ளி, ஏ.ஜெட்டிஅள்ளி, தடங்கம், சாமிசெட்டிபட்டி, நாகர்கூடல் உள்ளிட்ட அனைத்து 10க்கு மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் பணம் கொடுத்தால் மட்டுமே வேலை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழ்நாடு அரசு குறிப்பிட்ட அனைத்து சேவைகளையும் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்து தங்களுக்கு தேவையான சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் என அரசாணை உள்ளது.
பெண் மனுதாரர் ஒருவர் சான்றிதழ் தொடர்பாக விஏஓ அலுவலகத்திற்கு சென்றபோது, அதனை சந்தர்ப்பமாக பயன்படுத்திய ரோமியோ விஏஓ ஒருவர் அந்த பெண்ணை அனுசரித்து சென்றால் விரைவாக பணியை முடித்து கொடுப்பதாக கூறிய சம்பவம் இன்னும் ஓய்ந்த பாடில்லை…
அப்படி இருந்த போதிலும் ஆன்லைன் மூலம் பொதுமக்கள் தனக்கு தேவையான விண்ணப்பத்தை ஆன்லைன் மூலம் செய்து இருந்தாலும், அதனை சரி பார்க்கும் வேலையில் கிராம நிர்வாக அலுவலர்கள் முதலில் பணியாற்றி வருகின்றனர். அப்படி இருக்கும் பொழுது விண்ணப்பித்த சான்றிதழை கிடைப்பில் போட்டு, விண்ணப்பதாரரை அலைக்கழித்து அதன் பிறகு தங்களுக்கு தேவையானதை பூர்த்தி செய்த பிறகு விண்ணப்பத்தை சரிபார்த்து அனுப்புவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மனுதாரர்கள் எங்கு சென்றும் அலைய வேண்டாம். தங்களுக்கு தேவையான சான்றிதழை பெறுவதற்கு ஆன்லைன் மூலமும் விண்ணப்பிக்க தேவையில்லை, இவை அனைத்திற்கும் ஒரே இடத்தில் விஏஓ பாத்திர கடையில் அனைத்தும் கிடைக்கும் என விளம்பரம் செய்யாமல் ஒட்டுமொத்தமாக பணத்தை வாங்கிக் கொண்டு விண்ணப்பம் முதல் கைக்கு சான்றிதழ் வரும் வரை பார்த்துக் கொள்கின்றனர்.
இது பற்றி பொதுமக்கள் கூறியதாவது; தர்மபுரி மாவட்டத்தை பொருத்தவரை நல்லம்பள்ளி ஒன்றியம் புதியதாக பிரிக்கப்பட்ட நிலையில் தற்பொழுது வளர்ந்து வருகிறது. இதனால் நிலத்தின் மதிப்பு அதிகரித்ததை தொடர்ந்து நில சம்பந்தமான பிரச்சனைகள்,நிலம் வாங்க, விற்க மற்றும் கட்டிடங்கள் கட்டுவதற்கு தேவையான ஆவணங்கள் வேண்டி கிராம நிர்வாக அலுவலகத்தை நாடுகிறோம். இதனை சந்தர்ப்பமாக பயன்படுத்தி விஏஓ,கள் பணத்தை கொடுத்தால் மட்டுமே வேலையை செய்கின்றனர். நாங்கள் எங்களுக்கு தேவையான ஆவணத்தை பெறுவதற்காக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கின்றோம். அந்த மனு மீது உரிய விசாரணை நடத்தி அனுப்ப வேண்டிய முதல் கட்ட நடவடிக்கையில் விஏஓகள் உள்ளனர். ஆனால் அவர்கள் அந்த மனு மீது விசாரணை எதுவும் நடத்தாமல் கிடப்பில் போட்டு காலதாமதம் படுத்துகின்றனர். அலைந்து திரிந்த பிறகு மனுதாரர்கள் அவரிடம் சென்ற போது உரிய முறையில் கவனித்தால் மட்டுமே வேலையை செய்து கொடுக்கின்றனர். இதேபோன்று என்னுடைய பிரச்சனைக்கு 85 ஆயிரம் ரூபாய் கேட்டு பெற்ற பின்பு தான் வேலையை செய்தனர் என கூறியுள்ளார்.
எனவே நல்லம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் கிராம நிர்வாக அலுவலர்களை முறையாக கண்காணித்து, அரசு பணியை செய்வதற்கு கையூட்டு பெறுபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
