மை தருமபுரி தொண்டு அமைப்பு தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு சேவைப்பணிகளை சிறப்பாக செய்து வருகிறது.
குறிப்பாக, புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்கும், மக்களுக்கும் தட்டணுக்கள் தானமும், இரத்த தானமும், அவசர தேவையாக வழங்கி வருகின்றனர். அதேபோன்று புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்கு முடி உதிர்வு அதிகமாக இருக்கும்.
எனவே, அவர்களுக்கு செயற்கை தலைமுடி செய்வதற்காக, கூந்தல் தானம் செய்யும் விழிப்புணர்வையும் தருமபுரி மாவட்டத்தில் இந்த அமைப்பினர் ஏற்படுத்தி வருகின்றனர். மை தருமபுரி அமைப்பின், விழிப்புணர்வு பிரச்சாரம் காரணமாக தருமபுரி மாவட்டத்தில் நிறைய மகளிர்கள் கூந்தல் தானம் செய்து வருகின்றனர்.
அந்த வகையில், தருமபுரியில் டான் சிக்சாலயா பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருபவர் மாணவி தியானா. இவர் நல்லம்பள்ளி ஒன்றிய பாட்டாளி மக்கள் கட்சி செயலாளரும், தகடூர் தூண்கள் அமைப்பின் நிறுவனரும், தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு சமூகப் பணிகளை செய்து வருபவருமான ஒகே. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் மகள் ஆவார்.
மாணவி தியானா கூந்தல் தானம் செய்ய தனது விருப்பத்தை பெற்றோரிடம் கூறவே அவர்களும், ஒகே சொல்லி உள்ளனர். அதன்படி மாணவி தியானா நேற்று மை தருமபுரி அலுவலகத்திற்கு வந்து புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்காக கூந்தல் தானம் வழங்கினார்.
அவரின் இந்த மனிதநேய செயலை பெற்றோர்கள், பள்ளி நிர்வாகத்தினர், பல்வேறு சேவை அமைப்பினர் மற்றும் மை தருமபுரி அமைப்பின் நிறுவனத் தலைவர் முனைவர் சதீஸ் குமார் ராஜா, செயலாளர் தமிழ்செல்வன், தன்னார்வலர்க் கணேஷ், அம்பிகா ஆகியோர் பாராட்டினார்கள்.
