தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்டது மானியதனஅள்ளி ஊராட்சி. இந்த ஊராட்சியில் 10க்கு மேற்பட்ட குக்கிராமங்களைக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் 100 நாள் வேலை திட்டத்தின் அடிப்படையில் நேற்று மேல் பூரிகள் பகுதியில் 141 பணியாளர்களும், அஜ்ஜிப்பட்டி பகுதியில் 136 பணியாளர்களும், குரும்பட்டியான் கொட்டாய் கிராமத்தில் 144 பணியாளர்களும் வேலை செய்வதாக ஊராட்சி செயலாளர் தகவல் தெரிவித்தார்.

ஆனால் மேல்புரிக்கல் பகுதியில் வேலை செய்து கொண்டிருந்த பணியாளர்கள் மற்றும் பணிதல பொறுப்பாளரிடம் கேட்டபோது இன்று 112 பேர் மட்டுமே வேலை செய்வதாக கூறினர்.மானியதன அள்ளி ஊராட்சியில் இது போன்று 100 நாள் திட்டத்தின் மூலம் வேலை செய்யாத நபர்களுக்கு கூட வேலை செய்ததாக கணக்கு காட்டி பண மோசடியில் ஈடுபடுவதாக சந்தேகம் எழுகிறது.
இது பற்றி அப்பகுதி பொதுமக்களிடம் கேட்டபோது மேல்புரிக்கல் பகுதியைச் சேர்ந்த செவத்தம்மாள் (80) என்பவர் வயதின் மூப்பின் காரணமாக வீட்டிலேயே இருந்து வருகிறார். அவருடைய பெயரில் 100 நாள் திட்டத்தில் வேலை செய்ததாக கணக்கு காட்டி 25 ஆயிரத்திற்கு மேல் பணம் மோசடி செய்துள்ளதாக தெரிவித்தனர்.

அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட செவத்தம்மாவிடம் கேட்டபோது அதற்கு அவர் நான் இது நாள் வரை 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்ததே இல்லை. ஆனால் மாதம் மாதம் வார்டு நம்பர் நேரில் வந்து கை ரேகை வைத்து பணத்தை எடுத்து சென்றுள்ளனர் என தெரிவித்தார்.

சில நாட்களாக சம்பந்தப்பட்ட நபர்களிடம் ஊராட்சி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
எனவே இதுபோன்று மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் 100 நாள் திட்டத்தில் வேலை செய்யாத நபர்களின் பெயரில் வரவு வைத்து பண மோசடியில் ஈடுபடுபவர்கள் மீது மாவட்ட ஆட்சியர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
