தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்துள்ள ஜருகு பகுதியை சேர்ந்த செல்வி (45) மகன் சரவணன் (25). இவர்கள் கூலி வேலை செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு சரவணன் சொந்த வேலையின் காரணமாக தனது டூவீலரில் வெள்ளக்கல்லை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது கருப்பநாயக்கன்பட்டி அருகே வந்து கொண்டிருந்தபோது சாலை குறுக்கே அதிவேகமாக வந்த டூவீலர் சரவணன் வந்த டூவீலர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சரவணன் தூக்கி வீசப்பட்ட நிலையில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் சரவணனை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று விடியற்காலை சிகிச்சை பலன் இல்லாமல் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தொப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
