நல்லம்பள்ளி அருகே குடிதண்ணீரில் புழுக்கள் மிதந்து வருவதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலையில் கட்டை மற்றும் காலி குடங்களை வைத்து மறியலில் ஈடுபட்டனர்.
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்டது மானியத அள்ளி ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட ஜருகு பகுதியில் உள்ள பொது மக்களுக்கு குடிநீர் தேவைக்காக அரசு பள்ளி அருகாமையில் உள்ள உயர்மட்ட நீர்த்தேக்க தொட்டியில் இருந்து வரும் தண்ணீரை பயன்படுத்தி வருகின்றன. அவ்வாறு வீடுகளுக்கு வந்த தண்ணீரை குடங்களில் பிடித்து பார்த்தபோது அதில் புழுக்கள் உடன் கலங்கலாக இருந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் ஊராட்சி மன்ற நிர்வாகத்திடமும், டேங்க் ஆபரேட்டர்களிடமும் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துள்ளனர். அதே போன்று நேற்றும் குடிதண்ணீர் கலங்கலாக வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஊர் பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து காலி குடங்களுடன் அம்பேத்கர் காலனி பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த அலுவலர்கள் மற்றும் தொப்பூர் போலீசார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அந்தப் பேச்சுவார்த்தையில் பொதுமக்கள் கூறியதாவது, எங்கள் பகுதியில் வருகின்ற குடிதண்ணீரானது முறையாக கிடைப்பதில்லை. அப்படியே குடிதண்ணீர் வந்தாலும் அதில் கலங்களாக புழுக்களுடன் வருகிறது. இந்த தண்ணீரை குடிப்பதின் காரணமாக கிராம மக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டு அவ்வப்போது குழந்தைகளுக்கு உடல்நிலை சரியில்லாமல் போகின்றது. டேங்க் ஆபரேட்டர் முறையாக உயர்மட்ட நீர்த்தேக்க தொட்டியை சுத்தப்படுத்துவதே கிடையாது.

இதனால் தான் குடிதண்ணீர் கலங்களாக குழுக்களுடன் வருகிறது என புகார் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் அதிகாரிகள் ஊராட்சி மன்ற தலைவரை வரவழைத்து பொதுமக்களுக்கு தேவையான தண்ணீரை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் தேவைக்கேற்றவாறு குடிதண்ணீரை வழங்க வேண்டும், உயர்மட்ட நீர்த்தேக்க தொட்டியை அவ்வப்போது தொடர்ந்து சுத்தப்படுத்தி கொடுக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்தனர். அதன் அடிப்படையில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டமானது சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்றது.
