தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்துள்ள புறவடை ஜங்ஷன் பகுதி உள்ளது. இந்த பகுதி வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலை இரண்டு புறமும் சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் புறவடை ஜங்ஷன் பகுதி ஓரம் சாலை விரிவுபடுத்தும் பணி நடைபெற்று வருகிறது. அப்போது அந்த வழியாக சென்ற ஒகேனக்கல் பைப் லைன் உடைந்து இருந்ததால் திடீரென தண்ணீர் வெளியேறியது. சிறிது நேரத்தில் தண்ணீர் வேகம் அதிகமானதால் 10 அடி உயரத்துக்கு மேல் பீச்சு அடித்தது. இதனால் பல்லாயிரம் லிட்டர் ஒகேனக்கல் குடிநீர் வீணாக வெளியேறியது.

இது சம்பந்தமாக குடிநீர் வடிகால் வாரிய உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது உடைந்த பைப்பை அன்று மாலையே சரி செய்து விட்டோம் என கூறினர். ஆனால் உடைந்த பைப்பை முறையாக சரி செய்யாமல் பழைய துணி மற்றும் துருப்பிடிக்கும் போல்டை,உடைந்த இடத்தில் திணித்து மூடிவிட்டனர்.
இதனை செயல் திட்ட பராமரிப்பு உதவி நிர்வாக பொறியாளர் நேரில் கள ஆய்வு செய்துள்ளார். அதன் பிறகு சிறிது நேரம் கூட தாக்கு பிடிக்க முடியாமல் மீண்டும் தண்ணீர் வெளியேற தொடங்கிவிட்டது. அதன் பிறகு மறுநாள் மீண்டும் இரண்டாவது முறையாக தண்ணீர் வெளியேறியதை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் பொது மக்களுக்கு வழங்கக்கூடிய தண்ணீர் செல்லும் பைப்புகள் உடைந்தால் அதனை முறையாக சீர்படுத்தாமல் பழைய துணி மற்றும் துருப்பிடிக்கும் இரும்பு போல்டுகள் மூலம் அடைகின்றனர். இதன் காரணமாக நாளடைவில் இரும்பு போல்ட் துருப்பிடித்து பொதுமக்கள் குடி தண்ணீரில் கலப்பதால் அவர்களுக்கு நோய்த்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே உடைந்த குடிநீர் பைப்பை முறையாக சீர்படுத்த மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
