நல்லம்பள்ளி ஒன்றியத்தில் கள்ளக்குறிச்சியை முந்தும் அளவில் கள்ள மதுபானம் விற்பனை படுஜோராக நடந்து வருகிறது. மதுவிலக்கு தனிப்பிரிவு போலீசார் கண்டு கொள்ளாமல் உள்ளதால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் மொத்தம் 69 அரசு மதுபான கடைகள் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக நல்லம்பள்ளி ஒன்றியத்தில் உள்ள அதியமான்கோட்டை, நல்லம்பள்ளி, தர்மபுரி அடுத்த சோகத்துார், முத்துகவுண்டன் கொட்டாய் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு மதுபான கடைகளில் அதியமான்கோட்டை காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த சிலர் மூட்டை, மூட்டையாக மதுபானங்களை வாங்கி சென்று இந்த பகுதியில் மதுபானம் விற்பனை செய்பவர்களுக்கு கூடுதல் விலைக்கு சப்பளை செய்து வருகின்றனர்.
அவர்களிடம் இருந்து மதுபானங்களை வாங்குபவர்கள் விலை குறைந்த மதுபானங்களை 230 முதல் 250 ரூபாய் வரையிலும், விலை உயர்ந்த மதுபானங்களை 350 ரூபாய் வரையிலும், பீர் வகையை 250 ரூபாய்க்கும் விற்பனை செய்கின்றனர். மேலும் கட்டிங் உள்ளிட்டவற்றையும் விற்பனை செய்கின்றனர். இரவு,பகலாக தொடர்ந்து சந்துக்கடைகள் செயல்பட்டு வருகிறது. அரசு மதுபான கடைகள் திறப்பதற்கு முன்னதாக இந்த சந்து கடைகளில் தான் வியாபாரம் கொடி கட்டி பறக்கிறது. காலையில் பணிக்கு செல்லும் தொழிலாளர்கள் அருகில் உள்ள சந்து கடைகளுக்கு வந்து தேவையான அளவு மதுவை வாங்கி குடிக்கின்றனர்.

அதிகமாக குடித்தால் தொழிலாளர்கள் வேலைக்கு செல்லாமல் மேலும் குடிக்க ஆரம்பிக்கின்றனர். இதனால் இவர்களுடைய குடும்பம் நடுத்தெருவிற்கு வரும் சூழல் ஏற்பட்டுள்ளது.அரசு மதுபான கடையில் இல்லாத மது வகைகள் கூட சந்து கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது. அவ்வாறு தேவைக்கேற்ப மதுவை விற்பனை செய்யும் பொழுது கள்ள மதுபானங்கள், பெங்களூரில் இருந்து குறைந்த விலைக்கு வாங்கி வரப்படும் மதுபானங்களையும் கலந்து விற்பனை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த சந்து கடைகளுக்கு எத்தனை 1000 மது பாட்டில்கள் எப்பொழுது வேண்டுமானாலும் டோர் டெலிவரி செய்வதற்கு ஒரு மாபியா கும்பல் செயல்பட்டு வருகிறது.
அவர்கள் சப்ளை செய்யும் மதுபானங்கள் கள்ள மதுபானங்கள் மற்றும் நெடியுடன் கூடிய மதுபானங்கள் எனவும் குடிமகன்கள் அதை வாங்கி குடிப்பதினால் உடல் பாதிப்புகள் ஏற்படுகின்றது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக கடந்த இரு தினங்களுக்கு முன் திருமல்வாடியில் உள்ள டாஸ்மாக் கடையில் வாங்கிய மதுபானத்தை குடித்த இருவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு தர்மபுரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்த மதுபாட்டிலில் விஷம் கலக்கப்பட்டு இருந்ததா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இது குறித்து குடிமகன்கள் கூறியதாவது;
அதியமான் கோட்டை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் இருக்கும் பொதுமக்கள் விவசாயம் மற்றும் கூலி வேலையை அதிகமாக செய்து வருகிறோம். கடினமான வேலைகளை செய்த போது உடல் வலியை போக்குவதற்காக ஒரு சில நாட்களில் மாலை நேரத்தில் அரசு மதுபான கடையில் மது பாட்டிலை வாங்கி குடித்து வந்தோம். ஆனால் தற்பொழுது எங்கு பார்த்தாலும் சந்துக்கடைகள் நிறைந்துள்ளது.இந்த கடைகளில் ஒரு மதுபானம் 180 மில்லி இருக்கும் நிலையில் எங்களுக்கு தேவைக்கேற்ப 30 மில்லி, 90 மில்லி, கொடுப்பதால் அதிக அளவில் விற்பனை ஆகின்றது. இதனால் தொழிலாளர்கள் கிடைக்கும் பணத்திற்கு ஏற்ப சந்து கடைகளில் மதுவை வாங்கி குடிப்பதால் அடிமையாகி வருகிறோம் என கூறுகின்றனர்.
இது பற்றி பெண்கள் கூறியதாவது;
அதியமான் கோட்டை காவல் நிலையம் உட்பட்ட நல்லம்பள்ளி, மாதேமங்கலம், காரஓணி, குடுப்பட்டி, பாலஜங்கமன அள்ளி, சேசம்பட்டி,இலளிகம்,நார்த்தம்பட்டி,நூல அள்ளி,தின்ன அள்ளி, தடங்கம்,வத்தல் மலை அடிவாரம், மிட்டாரொட்டிஅள்ளி, தொப்பூர் காவல் நிலையம் உட்பட்ட வெள்ளக்கல், ஏலகிரி என பல கிராமங்களில் 80க்கும் மேற்பட்ட சந்துக்கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த சந்து கடைகள் இரவு,பகலாக 24 மணி நேரமும் மதுபானங்களை விற்பனை செய்கின்றனர். இந்த சந்துக்கடை மருத்துவமனை, பள்ளி, குடியிருப்புகள் அதிகம் உள்ள பகுதிகளில் பெரும்பாலும் நடைபெற்று வருகிறது.
சந்தக்கடையில் காலையில் மது குடிக்கும் மது பிரியர்கள் அந்த வழியாக செல்லும் பள்ளி குழந்தைகள், கல்லூரி மாணவிகள், மற்றும் வேலைக்கு செல்லும் பெண்கள் மிகுந்த அச்சத்துடன் சென்று வருகின்றனர். தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்துக்கடைகள் மூடுவதற்கு தொடர்ந்து முயற்சி எடுத்து வருகிறார். ஆனால் மதுவிலக்கு தனிப்பிரிவு போலீசார் பெயர் அளவு சிலர் மீது மட்டும் வழக்கு பதிவு செய்து, குறைந்தளவு மதுபானங்களை மட்டும் பறிமுதல் செய்கின்றனர். கைது செய்யப்படுபவர்களை பெரும்பாலும் உடனடியாக விடுதலை செய்து வருவதால் அவர்கள் மீண்டும் மதுபான விற்பனையை தொடங்குவதால், எங்களது குடும்பம் பாதிக்கப்பட்டு வருகிறது. நல்லம்பள்ளி ஒன்றியத்தில் மட்டும் இன்றி மாவட்டம் முழுவதும் சந்து கடைகளில் மதுபானம் விற்பனை செய்யப்படுவதை உடனடியாக முழுமையாக தடுக்க வேண்டும். மொத்தமாக மது மாபிய கும்பலுக்கு மதுபானங்கள் வழங்கும் டாஸ்மாக் கடை பணியாளர்கள் மீதும், மதுபானம் வாங்கி சத்து கடைகளுக்கு சப்பளை செய்யும் மாபியா கும்பல், இதற்கு துணை செல்லும் மதுவிலக்கு தனிப்பிரிவு போலீசார் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
தருமபுரியில் செயல்பட்டு வரும் மதுவிலக்கு தனிப்பிரிவு சட்ட விரோத மது பொருள்கள் தயாரித்தல், கடத்தல், விற்பனை, விநியோகம் ஆகியவற்றை தடுப்பதற்காக அமைக்கப்பட்டுள்ளது.ஆனால் இவர்கள் சட்ட விரோதமாக கள்ள மதுபானம் தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வருவதை கண்டுக்காமல் உள்ளனர். மாபியா கும்பல் ஒன்று ஸ்பிரிட் கலந்த கள்ள மதுபானங்களை விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் கள்ளக்குறிச்சி சம்பவம் போன்று நல்லம்பள்ளி ஒன்றியத்தில் அதிக உயிரிழப்புகள் நடைபெற்றால் தான் மதுவிலக்கு தனிப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா என பொதுமக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.
