தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்டது பாகல் அள்ளி ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட தண்டுகாரம்பட்டி கிராமத்தில் சுமார் 300-க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் குடியிருக்கும் பொது மக்களின் குடிநீர் தேவைக்காக ஊராட்சி நிர்வாகம் கிணறு மற்றும் ஆழ்துளை கிணறு ஆகியவற்றில் இருந்து குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வந்தனர். அவற்றின் மூலம் கிடைக்கக்கூடிய தண்ணீரை பொதுமக்கள் சீராக பயன்படுத்தி வந்தனர். ஆனால் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்குவதற்காக ஏற்கனவே இருந்த பைப் லைன்களை மாற்றி அமைத்து புதிய முறையில் பைப் லைன்கள் அமைக்கப்பட்டது. இதன் காரணமாக தண்டுகாரம்பட்டி கிராமத்தில் உள்ள ஒரு சில இடங்களைத் தவிர மற்ற இடங்களில் சீரான குடிநீர் முறையாக வழங்கப்படவில்லை. ஏற்கனவே சீரான குடிநீர் கிடைத்து வந்த நிலையில் ஜல்ஜீவன் திட்டத்தில் மூலம் அமைத்த பைப் லைன் காரணமாக குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடமும், வட்டார வளர்ச்சி அலுவலகத்திடமும் பலமுறை புகார் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனம் காட்டி வருகின்றன.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது; எங்கள் கிராமத்தில் சுமார் 350 க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். கடந்த காலங்களில் சீரான குடிநீர் வழங்கப்பட்டு வந்த நிலையில் ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் அமைக்கப்பட்ட பைப் லைன் முறையாக அமைக்காததே எங்கள் பகுதிக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்பட காரணமாக உள்ளது. அவ்வாறு அமைக்கப்பட்ட பைப் லைன்கள் சாலை ஓரங்களில் மேல்புறத்திலும், தெருக்களில் மேல்புறத்திலும் அமைத்ததால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் மூலம் பைப் லைன்கள் அவ்வப்போது உடைந்து பல்லாயிரம் லிட்டர் தண்ணீர் வீணாக தெருக்களில் வெளியேறுகிறது. இதனை சரி செய்ய ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் கூறும் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. உடைந்த பைப் லைன்களை ஊர் பொதுமக்களே சரி செய்து பயன்படுத்தி வருகின்றனர். பாகல்அள்ளி ஊராட்சில் உள்ள கிராமங்களில் பெரிய கிராமங்களில் ஒன்றாக தண்டுகாரம்ட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் இருக்கும் பொதுமக்களின் அடிப்படை தேவைகள் குறித்து ஊராட்சியில் உள்ள புகார் குறிப்பேட்டில் எழுதி வைத்தும் எந்த பயனும் இல்லை. தண்ணீர் வரும் பொழுது அதனைப் பிடிப்பதற்கு குறைந்தபட்சம் இரண்டு நபர்கள் வேண்டும். ஒருவர் பைப்பில் இருந்து வெளிவரும் தண்ணீரை பாத்திரங்கள் மூலம் சிறிது சிறிதாக மொண்டு எடுத்து குடத்தில் நிரப்ப வேண்டும். இல்லையென்றால் அரை லிட்டர் தண்ணீர் வந்தவுடன் பாத்திரம் நிரம்பி கீழே வருகின்றது. இவர்கள் அமைத்த பைப் லைன்கள் மூலம் அரை அடி உயரத்திற்கு கூட தண்ணீர் வருவது கிடையாது. இதனால் தரைமட்ட அளவில் குழி தோண்டியும், சமதள பரப்பில் பாத்திரங்கள் வைத்தும் தண்ணீர் பிடிக்கும் அவல நிலை ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் தண்ணீர் பிடிப்பதினால் வேலைக்கு செல்லும் பெண்கள், பள்ளிக்குச் செல்லும் மாணவர்களுக்கு காலதாமதம் ஏற்படுவதினால் மிகுந்த உள்ளோம். இதனால் ஒரு சில நாட்களில் முறையான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்காவிட்டால் வீடுகள் தோறும் கருப்புக்கொடி ஏந்தி எங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து போராட்டங்களும் நடத்துவோம் என கூறியுள்ளனர்.
எனவே முறையாக பணி செய்யாத ஊராட்சி நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுத்து, சீரான குடிநீர் வழங்குவதற்கு முறையான பைப் லைன்களை மறு சிறமைப்பு செய்து முறையான குடிநீர் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
