நார்த்தம்பட்டி-இலளிகம் பெரிய ஏரி 26 ஆண்டுகளுக்கு பின் நிரம்பியது: எம்எல்ஏ தலைமையில் கிராம மக்கள் மலர்தூவி உபரி நீரை வரவேற்றனர்.
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ளது நார்த்தம்பட்டி- இலளிகம் பெரிய ஏரி. சுமார் 300 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரிக்கு, கோம்பேரி ஏரி நிரம்பியதும், உபரி நீர் மழைக்காலங்களில் இலளிகம் பெரிய ஏரிக்கு வரும். அதன்படி கடந்த 1998-ஆம் ஆண்டு இலளிகம் பெரிய ஏரி நிரம்பியது. தற்போது சுமார் 26 ஆண்டுகளுக்கு பின், நார்த்தம்பட்டி-இலளிகம் பெரிய ஏரி நேற்று நிரம்பி, நார்த்தம்பட்டி கிராமத்தில் உள்ள மதகு வழியாக ஏரி கோடி போனது. இவ்வாறு வந்த உபரி நீரை, நார்த்தம்பட்டியில் கிராம மக்கள் சார்பில், பொங்கல் வைத்து வழிபாடு நடத்தி, ஆடுகள் பலியிட்டு, உபரிநீரை மலர்தூவி வரவேற்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு ரத்னா குரூப் நிறுவனங்கள் தலைவர் ஹரிகிருஷ்ணன், பாமக ஒன்றிய செயலாளர் அன்புகார்த்திக் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் சிறப்பு அழைப்பாளராக தர்மபுரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் கலந்து கொண்டு, கிராம மக்களுடன் இணைந்து, உபரி நீரை மலர்தூவி வரவேற்றார். பின்னர் அவர் ஊர்பொதுமக்களுக்கு இனிப்புடன் கூடிய அசைவ உணவு வழங்கினார்.

இதில் ஒன்றிய கவுன்சிலர் ரத்தினம்மாள், பாமக நிர்வாகிகள் செந்தில், தாமரைசெல்வன், கார்த்திகேயன், கோபி, ஜெயக்குமார், வடிவேல், சின்னசாமி, ராஜா, சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

