தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்டது பண்டஅள்ளி ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட ஜர்க்கான் கொட்டை பகுதியில் இருக்கும் பொது மக்களுக்கு குடிநீர் தேவைக்காக 15ஆவது நிதி குழு மானியத்தில் 2020-21 ஆம் ஆண்டு 10000 லிட்டர் கொள்ளளவு கொண்ட உயர்மட்ட நீர்த்தேக்க தொட்டி காந்திபுரம் பகுதியில் புதியதாக கட்டி முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர். அதன் பிறகு மீண்டும் இந்த உயர்மட்ட நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றுவதற்காக 15 வது குழு மானியத்தில் இருந்து 2022-23 ஆம் ஆண்டு 3.43 லட்சத்தில் ஆழ்துளை கிணறு, மின் மோட்டார், 5தனி நபர்களுக்கு குடிநீர் குழாய் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சில மாதங்களே பொதுமக்கள் குடிநீரை பயன்படுத்தி வந்துள்ளனர். தற்பொழுது சுமார் ஆறு மாதத்திற்கு மேலாக குடிநீர் பற்றாக்குறை மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் பழுதடைந்த ஆழ்துளை கிணற்றினை சீர் செய்யாமல் அலைக்கழித்து வருகின்றனர்.

பொதுமக்கள் கூறியதாவது; எங்கள் பகுதியில் சுமார் 30க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்களுடைய குடிநீர் தேவைக்காக காந்திபுரம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட நீர் தேக்க தொட்டியில் இருந்து குடிநீரை பயன்படுத்தி வந்தோம். அதற்கு தேவையான தண்ணீரை சில ஆண்டுகளுக்கு முன்பாக ஊராட்சி மன்ற பொறுப்பு தலைவராக இருக்கும் ஜமுனா மாதப்பன் என்பவர் புதிய ஆழ்துளை குழாய் மற்றும் மின் மோட்டார்கள் சுமார் 4 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் அமைத்தார். ஆனால் அவற்றில் போதிய தண்ணீர் இல்லாமல் நாங்கள் சிரமப்பட்டு வந்தோம். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தோம். அதன் அடிப்படையில் பொறுப்பு தலைவரின் மகன் சரி செய்வதாக கூறி ஆழ்துளை கிணற்றில் அமைத்துள்ள மோட்டார் மற்றும் பைப்புகளை வீட்டிற்கு எடுத்துச் சென்று விட்டார். ஆழ்துளை கிணற்றினை சீர் செய்து கொடுங்கள் என கேட்டால் மின் மோட்டார் பழுதாகி உள்ளது அதனை சரி செய்ய கொடுத்திருப்பதாக ஆறு மாத காலமாக கதை சொல்லி வருகிறார். எங்கள் பஞ்சாயத்தில் பல திட்டங்களை முழுமையாக செயல்படுத்தாமல் மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யாமல் தனது பாக்கெட்டை மட்டும் நிரப்பி வருகிறார்.இதனால் மாவட்ட நிர்வாகம், பொறுப்பு தலைவரின் மகன் எடுத்து சென்ற மோட்டார் மற்றும் பைப்புகளை மீட்டு ஆழ்துளை குழாயை சீர் செய்து பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என கூறியுள்ளனர்.
