தர்மபுரி மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் செயல்பட்டு வரும் அவசர சிகிச்சை மற்றும் மீட்பு மையம் (இசிஆர்சி) சார்பாக மனநலம் குன்றிய நபரை மீட்டு பராமரித்து உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

தர்மபுரி மாவட்டத்தில் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை செயல்பட்டு வருகின்றது. இந்தக் கல்லூரியில் அவசர சிகிச்சை மற்றும் மீட்பு மையம் (இசிஆர்சி) ஆனது 2022 மார்ச் 19ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வரின் ஆலோசனைப்படி தர்மபுரி மாவட்டத்தில் ஆதரவற்று சாலைகளில் சுற்றித் திரியும் மன நோயாளிகள் மற்றும் வீடற்ற நோயாளிகளுக்கு சமூகப் பணியாளர்கள் மூலமாக மீட்டு அவசர சிகிச்சை மற்றும் மீட்பு மையத்தில் சேர்த்து சிகிச்சை மற்றும் பாதுகாப்பு, பராமரிப்பு அளிக்கப்பட்டு வருகின்றனர்.அந்த மையத்தில் தற்போது வரை பல மாநிலங்களைச் சேர்ந்த மனநோயாளிகள் ஆண்கள் 77, பெண்கள் 30 என மொத்தம் 107 நபர்களை மீட்டு உள்ளனர்.அதன்பிறகு மனநல சிகிச்சைக்குப் பின் சுமார் 60 நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட மனநல ஆலோசனையில் கிடைத்த தகவலை வைத்து,அவர்களின் முகவரியை கண்டறிந்து அவர்களின் குடும்பத்தாருடன் சேர்த்து வைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த மையத்தில் 23 மன நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வட்டம் ஆளப்பிறந்தவன் கிராமத்தைச் சேர்ந்த மாதப்பன் என்கிற முத்துப்பாண்டியை கடந்த மாதம் ஏப்ரல் 14ஆம் தேதி அன்று தர்மபுரி நகர காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் மனநல சமூக பணியாளர்கள் S.சுதாகர் மற்றும் J.மாதேஸ்வரன் மூலம் மீட்கப்பட்டு அவசர சிகிச்சை மற்றும் மீட்பு மையத்தில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.

இவருக்கு வழங்கப்பட்ட மனநல ஆலோசனையில் அவர் கூறிய முகவரியை வைத்து அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்தின் மூலமாக அவர் குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அவருடைய உறவினர் மெய்நாதன் அவர்கள் அழைத்துச் செல்ல வந்திருந்தார்.தர்மபுரி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் அமுதவல்லி அவர்களின் தலைமையில் மருத்துவமனை கண்காணிப்பாளர் சிவக்குமார், மருத்துவ நிலைய அதிகாரி நாகவேந்தன் , மனநல மருத்துவப் பிரிவு துறை தலைவர் ப்ரீத்தா மற்றும் மருத்துவர்கள், மனநல சமூக பணியாளர்கள், மனநல ஆலோசகர், செவிலியர்கள் மற்றும் மற்ற பணியாளர்களின் முன்னிலையில் மெய்நாதன் வசம் ஒப்படைக்கப்பட்டு அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

By Raja

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *