காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் நேற்று மாலை தமிழக எல்லையை வந்தடைந்தது.
கர்நாடகா அணைகளில் இருந்து திறக்கப்பட்ட நீரால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து தற்போது 20 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
கர்நாடகா, கேரளா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளதால் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளான குடகு, வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி அணை தனது முழு கொள்ளவான 84 அடியில் 83.43 அடி வரை நீர் நிரம்பி உள்ளது. கிருஷ்ணராஜ சாகர் அணை தனது முழு கொள்ளளவான 124.80 அடியில் 106 அடி எட்டி உள்ளது.
கபினி அணையில் இருந்து வினாடிக்கு 25 ஆயிரம் கன அடி உபரி நீரும், கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து வினாடிக்கு 556 கன அடி உபரி நீர் என இரண்டு அணைகளில் இருந்து மொத்தம் 25 ஆயிரத்து 556 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கர்நாடகா அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரி நீர் நேற்று மாலை நேரத்தில் இருந்து தமிழக எல்லை பகுதிக்கு வரத் தொடங்கியுள்ளது. இதனால் நேற்று மாலை வினாடிக்கு 15 ஆயிரம் கன அடியாக இருந்த நிலையில் காலை 6 மணி நிலவரப்படி நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வினாடிக்கு 19 ஆயிரம் கன அடியாக இருந்த நிலையில் தற்போதைய நிலவரப்படி 20 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
இதனால் மெயின் அருவி ,ஐந்தருவி சிறிய அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கின்றன. மேலும் காவிரி ஆற்றிற்கு வரும் நீர் வரத்தை தமிழக கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக நேற்று மாலை முதல் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி பரிசல் இயக்குவதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதிக்கப்பட்ட
இந்நிலையில் இன்று நீர்வரத்து மேலும் அதிகரிப்பு காரணமாக அருவி மற்றும் ஆற்றுப்பகுதியிலும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதிக்கப்பட்டுள்ளது.

