தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் இருந்து நேற்று மாலை தனியார் பேருந்து ஒன்று 50க்கு மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு மாரண்டஅள்ளிக்கு சென்று கொண்டிருந்தது.
அதேபோல் வெளிச்சந்தையில் இருந்து பாலக்கோட்டிற்கு ஒரு தனியார் பேருந்தும் வந்து கொண்டிருந்தது.இந்த பேருந்திலும் 50க்கு மேற்பட்ட பயணிகள் இருந்தன.

அப்போது பாலக்கோடு சர்க்கரை ஆலை அருகே சாலையின் குறுக்கே ஒரு ஆட்டோ வந்ததாக கூறப்படுகிறது. அதன் மீது மோதாமல் இருக்க மாரண்ட அள்ளியை நோக்கி சென்ற பேருந்து டிரைவர் தங்கராஜ் என்பவர் பேருந்தை சாலை ஓரமாக திருப்ப முயற்சி செய்தார். அப்போது எதிரே வந்த தனியார் பேருந்து மீது எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் இரண்டு பேருந்துகளிலும் முன் பகுதி சேதம் அடைந்த நிலையில், பேருந்தில் வந்த 110 பேர் காயமடைந்தனர்.

விபத்தில் தனியார் பஸ் டிரைவர் ஜமீர், தண்டுக்காரனஅள்ளி சேர்ந்த பள்ளி மாணவர் அன்பரசு, மாணவி லோகேஸ்வரி, மாதம்பட்டியைச் சேர்ந்த தீபிகா, சுஜிதா, கோடியூரை சேர்ந்த மேகலா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பாலக்கோடு போலீசார் அப்பகுதி பொதுமக்கள் உதவி உடன் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்துக் குறித்து பாலக்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரண்டு தனியார் பேருந்துகளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 110 பேர் படுகாயம் அடைந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

By Raja

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *