தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் பூதனஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் சுமார் 300க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் .இந்த பகுதியில் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் நிலம் கையகப்படுத்தி தர்மபுரி நகராட்சி குப்பை கழிவுகளை சேமித்து, திடக்கழிவு மேலாண்மை திட்டப் பணி செய்திட அரசு முடிவு செய்து, இந்த திட்டத்தை சம்மந்தப்பட்ட ஊராட்சியில் மேற்கொண்டால், நிலத்தடி நீர் மாசடையும், விவசாய விளை நிலங்கள் மலட்டுத்தன்மை ஏற்படுவதுடன், ஊராட்சி குடியிருப்பு மக்களுக்கு சுவாச கோளாறு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
இதனால் பூதனஅள்ளி ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை தவிர்த்து, வேறு இடத்திற்கு இடம் மாற்றம் செய்யக்கோரி,
நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு, பூதனஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்றிணைந்து,கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கோவிந்தசாமி, நீலமேகம் மற்றும் போலீசார் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் ஒரு மணி நேர பேச்சுவார்த்தைக்கு பின் உங்களது கோரிக்கை குறித்து மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வதோடு, ஊராட்சி மக்கள் அனுமதி இல்லாமல் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த மாட்டோம் என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து கண்டன ஆர்ப்பாட்டத்தை ஊராட்சி மக்கள் கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவம் சம்மந்தப்பட்ட அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

