தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்டது கம்மம்பட்டி ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட சோளியானூர்,மலையூர் காடு பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றன.
இவர்கள் வெளியில் செல்வதற்காகவும், விவசாய நிலங்களில் விளையக்கூடிய பொருட்களை விற்பனைக்காக எடுத்துச் செல்லவும், பள்ளி குழந்தைகள் மற்றும் வேலைக்கு செல்லும் பெண்கள் செல்லவும் மலையூர் காடு முதல் சோளியானுர் வரை உள்ள சாலையை பயன்படுத்தி வந்தனர்.
இந்த சாலையானது 15 வருடங்களுக்கு முன்பாக தார்சாலை அமைக்கப்பட்டதினால் தற்பொழுது குண்டு குளியுமாக மாறி உள்ளது. இதனால் இந்த சாலையை பயன்படுத்த முடியாத நிலையில் கிராம மக்கள் தவித்து வந்தனர்.
இதனால் தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்பி.வெங்கடேஸ்வரன் அவர்கள் தமிழ்நாடு முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்ததின் அடிப்படையில் 6.6 கிலோமீட்டருக்கு 4.75 கோடி மதிப்பீட்டில் தார் சாலை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் தார் சாலை அமைக்கும் பணிக்கு தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்பி.வெங்கடேஸ்வரன் அவர்கள் பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.
சட்டமன்ற உறுப்பினர் கூறியதாவது;
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் எனக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்தில் தருமபுரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நீண்ட நாள் பிரச்சனை, தீர்க்கப்படாமல் உள்ள பிரச்சனைகள் குறித்து ஒரு 10 திட்டங்களை எழுதிக் கொடுங்கள் உடனடியாக உங்களுக்கு நிறைவேற்றி தருகிறோம் என எழுதியிருந்தார்.
அதன் அடிப்படையில் அப்போது இருந்த மாவட்ட ஆட்சியர் வழியாக 10 திட்டங்களை எழுதி இருந்தேன். அதில் முதல் திட்டமாக கம்மம்பட்டி ஊராட்சிக்கு பரிகம் காடு-மலையூர்காடு வரை உள்ள வனத்துறை சாலையையும், மலையூர்காடு-சோளியானூர் வரை உள்ள பழுதடைந்த சாலை, மலையூர்காடு-பெரும்பாலை வரை உள்ள மண் சாலை என மூன்று சாலைகளையும் தார் சாலையாக அமைக்க வேண்டும் என முதல் கோரிக்கையாக வைத்தேன்.
இந்த நிலையில் தமிழக அரசு இதற்கான மதிப்பீடுகளை தயார் செய்து வைத்த நிலையில் தார் சாலை அமைப்பதற்கு காலதாமதமானது. இதனால் இந்த பகுதிக்கு அரசு பேருந்து வருவதற்கும், பள்ளி மாணவர்கள் செல்வதற்கும் மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.

பொதுமக்களின் அடிப்படை தேவைக்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் ஆர்ப்பாட்டம் நடத்தினேன். அதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் சமரச பேச்சுவார்த்தை நடத்தி பழுதடைந்த சாலையை சீர் செய்கிறோம் என தெரிவித்தனர்.
ஆனால் நாங்கள் முழுமையான சாலையாக அமைத்து கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்ததின் அடிப்படையில் அவர்கள் கோரிக்கையை ஏற்று நிறைவேற்றி கொடுப்பதாக உறுதியளித்தனர். அதன் அடிப்படையில் கடந்த மாதம் நிதி ஒதுக்கப்பட்டது. அடுத்த இரண்டு சாலைகளும் திட்டம் தயார் நிலையில் உள்ளது.

அதற்காக மத்திய அரசு மற்றும் மாநில அரசு வனத்துறை அலுவலர்களை அழைத்து வந்து மலையூர் காடு, பரிகம் சாலையை நேரடியாக ஆய்வு செய்ய அழைத்து வருவேன். வனத்துறைக்கு கட்ட வேண்டிய 1.19 லட்சம் ரூபாயை கட்டியவுடன் சாலை அமைக்கும் பணியானது நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் நல்லம்பள்ளி ஒன்றிய குழு தலைவர் மகேஸ்வரி பெரியசாமி, ஊராட்சி மன்ற தலைவர் சரண்யா சரவணன், கவுன்சிலர் சண்முகம்,ராஜீவ் காந்தி மற்றும் ஊர் பொதுமக்கள் உடன் இருந்தனர்.

