தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்டது மானியத அள்ளி ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட அருந்ததியர் காலனி பகுதியில் 200க்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதி சார்ந்தவர் இறந்துவிட்டால் அருகாமையில் அமைந்துள்ள அருந்ததியர் மயானத்தில் அடக்கம் செய்வது வழக்கம். அந்த மயான பாதைக்கு முறையாக வழித்தடம் இல்லை, ஏற்கனவே நாங்கள் பயன்படுத்தி வந்த வழி பாதை மீட்டுத்தர வேண்டும் என ஊர் பொதுமக்கள் குற்றம் சாட்டி அதே பகுதியைச் சார்ந்த முருகன் (48) சடலத்தை நேற்று எடுக்க மறுப்பு தெரிவித்து வந்தனர். இதனால் மாவட்ட வருவாய் அலுவலர் பால்பிரின்ச் ராஜ்குமார், நல்லம்பள்ளி வட்டாட்சியர் சிவக்குமார் ஆகியோர் நேரில் வந்து கிராம நிர்வாக அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சு வார்த்தையில் அலுவலர்கள் கூறியதாவது, ஆதிதிராவிட மயான பகுதியானது 30 வருடங்களுக்கு முன்பாக ஒதுக்கப்பட்டு அதற்கான வழி பாதையும் விடப்பட்டுள்ளது. அந்த வழி பாதையை ஏற்கனவே மீட்டுக் கொடுத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொடுத்து விட்டோம்.

ஆனால் அந்த வழி பாதையை ஒரு சிலர் முள்வேலி அமைத்து இருந்ததை நாங்கள் எடுத்துக் கொடுக்கின்றோம் நீங்கள் சடலத்தை உங்களுக்கு ஒதுக்கப்பட்ட வழிப்பாதையில் எடுத்துச் செல்லுங்கள். நீங்கள் வழக்கமாக எடுத்துச் சொல்லும் வழிப்பாதை பட்டா நிலம் என்பதால் அதில் எடுத்துச் செல்ல இயலாது என தெரிவித்தனர். அதன் பிறகு ஊர் பொதுமக்கள் சடலத்தை எடுப்பதாக கூறி சென்று விட்டனர். இதன் காரணமாக அசம்பாவிதங்கள் எதாவது ஏற்படுத்தாமல் இருக்க தொப்பூர் காவல் ஆய்வாளர் (பொ) புவனேஸ்வரி தலைமையிலான 50க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தன. அதன் பிறகு மாலை சடலத்தை எடுத்து வந்த பொதுமக்கள் சாலையில் வைத்து எங்களுக்கு காலம் காலமாக எடுத்துச் சென்ற வழிப்பாதை தான் வேண்டும் என கோரிக்கை வைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டன. இதனால் அங்கேயே இருந்த நல்லம்பள்ளி வட்டாட்சியர் செந்தில் மற்றும் காவல் ஆய்வாளர் புவனேஸ்வரி ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஏற்கனவே மயானத்திற்கு செல்ல நீங்கள் பயன்படுத்தி வந்த வழித்தடம் பட்டா நிலம் என்பதால் அதில் சடலத்தை எடுத்துச் செல்ல அனுமதி இல்லை,உங்களுக்காக ஒதுக்கப்பட்ட மயான வழித்தடத்தில் சடலத்தை எடுத்துச் செல்லுங்கள் என கூறி பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இந்த பேச்சுவார்த்தையானது சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்றது.

அதற்குள்ளாக பொது மக்களிடையே ஒரு தரப்பினர் அரசால் ஒதுக்கப்பட்ட மயான வழி பாதையை பயன்படுத்தலாம் என தெரிவித்தனர். மற்றொரு தரப்பினர் காலம் காலமாக பயன்படுத்திய வழிதடத்தையே வேண்டும் என தெரிவித்தனர்.இதனால் இரண்டு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதன் காரணமாக இறந்தவரின் உறவினர்கள் நாங்கள் அரசாங்கம் ஒதுக்கப்பட்டுள்ள மயான வழித்தடத்திலேயே எடுத்துச் செல்கிறோம் என தெரிவித்து சடலத்தை எடுத்து சென்று அடக்கம் செய்தனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
