கர்நாடகா அணைகளில் இருந்து 25ஆயிரத்து 556 கன அடி உபரி நீர் திறப்பால் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து வினாடிக்கு 6ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது

கனமழை
தென்மேற்கு பருவமழை கர்நாடகா, கேரளா மாநிலத்தில் தீவிரமடைந்து உள்ளது. இதனால் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளான குடகு, வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி அணை தனது முழு கொள்ளவான 84 அடியில் 83.43அடியை எட்டி உள்ளது.இதனால் கபினி அணையில் இருந்து வினாடிக்கு 25 ஆயிரம் கன அடி உபரி நீரும், கிருஷ்ணராஜ சாகர் அணை தனது முழு கொள்ளளவான 124.80அடியில் 106அடியே எட்டி உள்ளது.இதன் காரணமாக கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து 556கன அடி தண்ணீரும் என இரண்டு அணைகளில் இருந்தும் மொத்தமாக 25 ஆயிரத்து 556கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

நீர்வரத்து அதிகரிப்பு
இதன் காரணமாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் வினாடிக்கு 4 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. தற்போது கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து கூடுதலாக உபரி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது.நேற்று மாலை 6மணி நிலவரப்படி ஒகேனக்கலுக்கு 6 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது.
இதனால் மெயின் அருவி ,ஐந்தருவி சினிபால்ஸ், உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் கொட்டியது.மேலும் காவிரி ஆற்றில் நீர் வரத்தை தமிழக கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.மேலும் கர்நாடக அணைகளிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் இன்று மாலைக்குள் மேட்டூர் வந்தடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

By Raja

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *