தர்மபுரி அருகே பரபரப்பு
முனியப்பன் கோவில் உண்டியலில் ₹90.42 கோடிக்கான காசோலை.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே பிலியனூர் அக்ரஹாரம் பகுதியில் பிரசித்தி பெற்ற முனியப்பன் கோவில் உள்ளது.இங்கு மார்கழி மாதம் இரண்டாவது செவ்வாய்க்கிழமை கோவில் திருவிழா நடைபெறுவது வழக்கம் .இந்த திருவிழாவில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடனை செலுத்துவது வழக்கம். இந்த கோவிலில் அன்னதானம் வழங்கப்படுகிறது. அதற்கான கோவிலில் முன் பகுதியில் ஒரு உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. இந்த உண்டியலை அறநிலையத்துறை அதிகாரிகள் மாதம் ஒருமுறை திறந்து அதில் இருக்கும் காணிக்கைகளை எடுத்து அன்னதானம் வழங்கி வருகின்றனர்.

நேற்று முன்தினம் முனியப்பன் கோவிலில் அன்னதான உண்டியல் திறக்கப்பட்டு இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் முன்னிலையில் காணிக்கை எண்ணப்பட்டது.
அப்போது அந்த உண்டியலில் ஒரு காசோலை இருந்தது. அந்த காசோலையில் 90 கோடியே 42 லட்சத்து 85 ஆயிரத்து 256 என எழுதி இருந்ததை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் கோவில் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அந்த காசோலையில் மகேந்திரா டெக்னாலஜி என்றும் சவுத் இந்தியன் வங்கிக்கான காசோலை என தெரியவந்தது. அந்த காசோலைக்கான கணக்கு தர்மபுரி சவுத் இந்தியன் வங்கியில் உள்ளதா என சவுத் இந்தியன் வங்கிக்கு சென்று காசோலையை காட்டி அறநிலைத்துறை அதிகாரிகள் விசாரித்தனர். முனியப்பன் கோவில் உண்டியலில் இவ்வளவு பெரிய தொகை போட்டது அப்பகுதியில் பேசும் பொருளாகி உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில் பிலியனூர் அக்ரஹாரம் முனியப்பன் கோவிலில் உண்டியலில் 90 கோடியே 42 லட்சத்து 85 ஆயிரத்து 256 என எழுதி இருந்த காசோலை ஒன்றை பக்தர் காணிக்கையாக செலுத்தி இருந்தார். அந்த காசோலையை எடுத்துச் சென்று சம்பந்தப்பட்ட வங்கியில் விசாரித்த போது அந்த கணக்கில் பணம் எதுவும் இல்லை. அந்த காசோலையை யார் போட்டார்கள் என விசாரித்து வருகிறோம் என்றார்.
