தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்துள்ள தொப்பூர் தருமபுரி மாவட்டத்தின் எல்லை பகுதியாக உள்ளது. இந்த தொப்பூர் வழியாக கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை செல்லக்கூடிய தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இதன் காரணமாக இந்த பகுதியில் தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது. இதனை சந்தர்ப்பமாக பயன்படுத்தி மர்ம கும்பல் ஒன்று ஆந்திரா மாநிலம், ஒடிசா மாநிலம் போன்ற பல்வேறு பகுதிகளிலிருந்து மாடுகள் ,எருமைகளை ஒட்டுமொத்தமாக வாங்கி கேரள மாநிலத்திற்கு இறைச்சிக்காகவும், இறைச்சி ஏற்றுமதிக்காகவும் அனுப்பி வைக்கின்றனர். மற்ற இடங்களில் 50,000 ரூபாய் மதிப்பிலான எருமை கேரள மாநிலத்தில் 80,000 ஆயிரத்திற்கு விற்பனை செய்கின்றனர். இதன் காரணமாக அதிக அளவில் எருமை,மாடுகளை வாகனங்களில் சட்டத்திற்கு புறம்பாக எடுத்துச் செல்கின்றனர்.

அவ்வாறு கால்நடைகளை ஏற்றிச்சென்ற கன்டெய்னர் லாரியை இந்திய விலங்குகள் நல வாரிய உறுப்பினர் வழக்கறிஞர் ஒருவர் நேற்று அந்த வழியாக செல்லும் பொழுது வாகனத்தில் கால்நடைகள் இருப்பதை அறிந்துள்ளார். இது சம்பந்தமாக தொப்பூர் போலீசாரிடம் சட்ட விரோதமாக கால்நடைகளை கன்டெய்னர் லாரியில் துன்புறுத்தும் விதமாக ஏற்றி வருவதாக தொலைபேசியில் புகார் தெரிவித்துள்ளார். அதனை அடுத்து தொப்பூர் ஜங்ஷன் அருகே டாரஸ் லாரி வரும் பொழுது அந்த லாரியை நிறுத்தி போலீசார் வரும் வரை காத்திருந்தார். அதன் பிறகு சம்பவ இடத்திற்கு வந்த தொப்பூர் போலீசார் கால்நடைகளை ஏற்றி வந்த டாரஸ் லாரியை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில் ஒரு கண்டைனர் லாரியில் 26 எருமைகள்,6 பசுமாடுகளை ஏற்றி சித்திரவதை செய்து ஏற்றி வந்ததில் ஒரு எருமை பரிதாபமாக உயிரிலிருந்து கிடந்தது. அதன் அடிப்படையில் ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த டிரைவர் பாஷா(38), கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த கால்நடை உரிமையாளர் சல்மான்ஷரிப்(35), பெங்களூரைச் சார்ந்த லாரி உரிமையாளர் அஜ்மத்(50) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். கண்டெய்னர் லாரியில் இருந்த கால்நடைகளை எருமாம்பட்டி பகுதியில் உள்ள கோசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இது பற்றி இந்திய விளங்குகள் நல வாரிய உறுப்பினர் கூறியதாவது; தர்மபுரி மாவட்டத்தின் வழியாக ஆந்திரா, ஒடிசா போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்து எருமை, பசுமாடுகள், நாட்டு மாடுகளை அடிமாட்டு விலைக்கு வாங்கி கேரள மாநிலத்திற்கு சட்ட விரோதமாக ஏற்றுமதி செய்து வருகின்றனர். கால்நடைகளை விற்பனைக்காகவும் மற்ற தேவைகளுக்காகவும் ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்கு ஏற்றிச்செல்லும் பொழுது கால்நடைகளுக்கு உரிய மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். ஒரு நாளைக்கு கால்நடைகளை 80 முதல் 90 கிலோ மீட்டர் வரைக்கும் மட்டுமே எடுத்துச் செல்ல வேண்டும். 25 அடி நீளமுள்ள வாகனத்தில் 6 கால்நடைகளை மட்டுமே ஏற்றிச் செல்ல வேண்டும். அவ்வாறு ஏற்றிச்செல்லும் கால்நடைகளுக்கு உரிய தீவனம் மற்றும் தண்ணீர் முறையாக இருக்க வேண்டும் என பல வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளது. ஆனால் சில மர்ம கும்பல் 25 அடி நீளமுள்ள வாகனத்தில் 30க்கு மேற்பட்ட கால்நடைகளை ஏற்றி சித்திரவதை செய்து எடுத்து செல்கின்றனர்.
இதனால், தொப்பூர் பகுதியில் செக் போஸ்ட் அமைத்து இந்த வழியாக செல்லும் வாகனங்களை சோதனை செய்து அனுப்ப வேண்டும். சட்டத்திற்கு புறம்பாக கால்நடைகளை ஏற்றி செல்லும் வாகனங்கள் மீதும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
