தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டையில் மிகவும் பிரசித்தி பெற்ற காலபைரவர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை, விசேஷ தினங்கள் மற்றும் அஷ்டமி நாட்களில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம்.

இந்த நிகழ்ச்சிக்காக தர்மபுரி மாவட்டத்தை விட வெளி மாவட்டங்கள் மற்றும் கர்நாடகா மாநிலத்திலிருந்து அதிகப்படியான பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல்கின்றன. இந்த நிலையில் கோவில் நிர்வாகம் அபிஷேகம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் நபர் ஒன்றுக்கு 250 ரூபாய் கட்டணம் கட்ட வேண்டும், அதற்கு தேவையான அபிஷேக பொருள்களை நீங்களாகவே எடுத்து வந்து அபிஷேக நேரத்தில் கொடுக்க வேண்டும் என அறிவிப்பு பலகையும் வைத்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று தேய்பிறை அஷ்டமி என்பதால் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் விடிய விடிய வந்து சென்றனர். இதனால் அபிஷேகம் செய்ய வந்தவர்களிடம் நிர்ணயித்த கட்டணம் 250 ரூபாய்க்கு பதிலாக 1000 ரூபாய் வசூல் செய்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு 250 ரூபாய்க்கு மட்டுமே கோவில் நிர்வாகத்தின் சார்பாக ரசீது கொடுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பக்தர் ஒருவர் 250 ரூபாய்க்கு பதிலாக அபிஷேகப் பொருட்களை நாங்களே வைத்துள்ளோம் எனக் கூறி 1000 ரூபாய் வசூல் செய்வதாக வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோவானது தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.


இது பற்றி பக்தர்கள் கூறியதாவது; இந்த கால பைரவர் கோவிலில் அஷ்டமி நாட்களில் அதிகப்படியான பக்தர்கள் வருகின்றனர். கோவிலுக்கு வந்து எங்களுடைய கஷ்ட நஷ்டங்களை சொல்லி வைரவரை வழிபட்டு செல்கிறோம். அதிகப்படியான பக்தர்கள் வருவதினால் அதனை சந்தர்ப்பமாக பயன்படுத்தி கோவில் நிர்வாகம் பல்வேறு வகையில் கட்டணங்களை வசூல் செய்கின்றது. அதில் ஒரு சிலர் உங்களை நேரடியாக கருவறைக்கு கூட்டி செல்கிறோம் எனக் கூறி ஆயிரக்கணக்கில் பணத்தைப் பெற்றுக் கொண்டு அழைத்துச் செல்கின்றன. பணம் கொடுக்க இயலாத பக்தர்கள் நீண்ட வரிசையில் கால் கடுக்காக நின்று பைரவரை வணங்கி செல்கின்றோம். அபிஷேகத்திற்காக 250 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்து அதற்கு தேவையான அபிஷேகப் பொருட்களை நீங்களே வாங்கி வாருங்கள் என அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். ஆனால் அதற்கு பதிலாக ஒட்டுமொத்தமாக சேர்த்து 1000 ரூபாய் கொடுத்து விடுங்கள். அனைத்து பொருள்களும் எங்களிடமே உள்ளது எனக் கூறி வசூலிக்கின்றனர். ஒருவர் வாங்கி கொடுக்கும் அபிஷேக பொருள்களை வைத்துக்கொண்டு அனைவரையும் ஒரே இடத்தில் அமர வைத்து அந்த அபிஷேக பொருள்களில் மட்டுமே அபிஷேகம் செய்கின்றன. மற்றவர்களிடம் அபிஷேகம் பொருள் வாங்குவதற்கு என வசூல் செய்யும் 750 ரூபாய் தனது பாக்கெட்டில் போட்டு செல்கின்றனர் என கூறுகின்றன.

எனவே,காலபைரவர் கோவிலில் அதிகப்படியான பக்தர்கள் வருகையை பயன்படுத்தி அபிஷேகம் செய்வதற்கு கூடுதல் கட்டணம் வசூல் செய்யும் கோவில் நிர்வாகத்தின் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

By Raja

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *